சுக்குமொழிகள் பத்து
- தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.
- சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.
- சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.
- மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.
- சுக்கு அறியாத கஷாயம் உண்டா?
- இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.
- பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.
- சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.
- சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.
- சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.
பொதுப்பயன்கள்:
பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.
தயாரிக்கும் பக்குவம்:
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.