உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.
வியர்வையால் இந்தச் சிறிய கட்டிகள் வருவதால், இதை ‘வேர்க்குரு’ அல்லது ‘வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம். இது தொந்தரவே தவிர, வியாதி அல்ல. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.
ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம்.
வேப்பிலை : வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.
சந்தனம் : கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும் வியர்குருவை சந்தனம் கொண்டும் போக்கலாம். இதற்கு சந்தனத்தில் உள்ள குளிர்ச்சித்தன்மை தான் காரணம். அதற்கு சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள்.
மருதாணி : இலை மருதாணி இலைகளை சிறிது அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வியர்குரு நீங்கும். இதற்கு மருதாணியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை தான் காரணம். ஆனால் மருதாணி சருமத்தில் ஒட்டிக் கொள்ளும்.
அருகம்புல் : அருகம்புல்லில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-செப்டிக் பொரள் உள்ளது. இது வியர்வையினால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும். அதற்கு 4:1 என்ற விகிதத்தில் அருகம்புல் மற்றும் மஞ்சள் தூளை எடுத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
தயிர் : தயிரின் குளிர்ச்சித்தன்மையும் வியர்குரு பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் தரும். அதற்கு தயிரை சருமத்தில் தடவி நன்கு உலர்ந்ததும், குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.
பாசிப்பருப்பு : கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக, பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதற்கு பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்பு மாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக் கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.
வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.
மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.