பெண்களுக்கான இலகுவான வீட்டு பராமரிப்பு டிப்ஸ்

வீட்டு பராமரிப்பு டிப்ஸ்

வீட்டு பராமரிப்பு டிப்ஸ்

 

உடையணியத் தொடங்கும் முன் அதை  நன்றாக உதறி விட்டே அணிய வேண்டும். கொடியிலோ, கோட் ஸ்டாண்டிலோ மாட்டி வைத்த துணிகளில் எறும்புகள், பூச்சிகள் இருக்கலாம். ஏன் தேள் கூட வெப்பத்துக்குப் பாதுகாப்பாக மறைந்து இருக்கலாம்.

தந்தப் பிடி போட்ட கத்திகள் வாங்கும்போது பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.  நாளடைவில் பிடியில் மஞ்சள் நிறம் படிந்து மங்கி விடும். எலுமிச்சம் பழச்சாற்றைத் தடவி அழுத்தித் தேய்த்தால் மஞ்சள் நிறம் மறைந்து வெண்மையாகி விடும்.

பீங்கான் வாஷ் பேசின், குளியல் தொட்டி போன்றவற்றில் மஞ்சள் கறை படிவது சகஜம். உப்பும் டர்பென்டைனும் கலந்து தேய்த்தால் கறை மறைந்து பளபளவென்றாகி விடும்.

குளியலறைச்சுவர், வாஷ்பேசின், குழாய்களில் உப்புநீர்க் கறை படிந்திருந்தால் வினீகருடன் உப்புக் கலந்து தேய்த்தால் போய்விடும்.

புட்டியின் மூடியைத் திறக்க முடியாமல் இருக்கும்போது ஈரத்துணியினால் மூடியை அழுத்தி பிடித்துக்கொண்டு திருகினால் எளிதில் கழன்று விடும்.

 கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்திருந்தால் அந்த இடத்தில் கொஞ்சம் பற்பசையை தேய்த்தால் கீறல் மறைந்து விடும்.

சிகரெட் பிடிப்பவர் உள்ள அறையில் ஒரு குவளையில் வினீகர் வைத்திருந்தால் அது சிகரெட் வாடையை கிரகித்துக் கொண்டு விடும்.

கம்பளித்துணிகளை வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். முறுக்கி பிழியக் கூடாது. ஒரு துண்டால் ஒத்தி எடுத்து ஈரத்தைப் போக்கி நேரடியாக சூரிய ஒளி விழாத இடத்தில் தரையில் போட்டு உலர்த்த வேண்டும்.

தோல் பொருட்கள் மீது மழைக்காலங்களில் காளான் படிவது சகஜம். வெங்காயச் சாற்றைத் தடவி துடைத்தால் அது அகன்று விடும். 

சுவற்றில் ஆணியடிக்கும்போது அதன் முனையைத் தேங்காய் எண்ணை தடவி அடித்தால் சுலபமாக இறங்கும்.

கார்பாலிக் அமிலம் கலந்த நீரினால்  மரச் சாமான்களை கழுவினால் அதன் இரண்டு இடுக்குகளில் மறைந்துள்ள  மூட்டைப்    பூச்சிகள் இறந்து விடும்.

டெலிவிஷனில் ஏற்படும் குறைகளுக்குப் பெருமளவில் காரணமாக இருப்பது ஆன்டெனாதான். டி.வி நிலையத்துக்கு அருகில் உங்கள் வீடு இருந்தால் இன்டோர் ஆன்டெனாவே போதும். அதிக தூரத்தில் இருந்தால் அவுட்டோர் ஆன்டெனா இருப்பது அவசியம்.

திடீரென்று மின் சப்ளை தடைப்பட்டால் உடனே டி.வி சுவிட்சை அணைத்து விடுங்கள். சப்ளை வந்த பிறகு போட்டுக் கொள்ளலாம்.

ஜிப் வைத்து தைத்த பர்ஸ் , கைப்பை போன்றவற்றில் ஜிப் சிக்கிக் கொண்டு நகர மறுப்பதுண்டு. அந்த இடத்தில் பென்சிலால் தேய்த்தால் சரியாகிவிடும்.

மெழுகுவர்த்திகளைக் குளிர்ந்த நீரில் வைத்து  எரிய விட்டால் அதிகப் பிரகாசமாகவும் நீண்ட நேரமும் எரியும்.

படுக்கும் மெத்தையில் சிறு பூச்சிகள் எப்படியோ வந்து விடுகின்றன. நிம்மதியான தூக்கத்துக்கு இடைஞ்சலாக உள்ளவை இவை. மெத்தைக்கடியில் சில மிளகுகளை போட்டு வைத்தால் எந்தப் பூச்சியும் வராது.

சோப்புப்  போட்டுத் துவைத்த துணியை நல்ல வெயிலில் காய வைத்தால் மஞ்சள் கறை போய்விடும்.

குழந்தைகள் அணியும் உடைகளில் அவை மெல்லும் சூயிங்கம் சில சமயங்களில் ஒட்டி கொள்வதுண்டு. எளிதில் எடுக்க வராது. ஆடையில் அது ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தின் பின் புறத்தில் இஸ்திரிப் பெட்டியால் தேய்த்தால் எளிதில் எடுக்க வரும்.

வியர்வைக் கறை போவதற்குத்  துணியை வினீகர் கலந்த நீரில் அலச வேண்டும்.

சாப்பிடும் மேஜையில் வைக்கும் கண்ணாடி பாத்திரங்களை டிஷ்யூ பேப்பரால் தேய்த்துத் துடைத்தால் மெருகுடன் விளங்கும்.

உப்புக் கரைசலில் துணியை நனைத்து அதனால் பீங்கான் பாத்திரங்களை அழுத்தித் துடைத்தால் அதில் படிந்துள்ள கறைகள் போகும்.

சாதாரணச் சட்டைகளின் கழுத்துப் பகுதியில் தான் அதிகமாக அழுக்கு படியும். ஷாம்பூவைக் கொஞ்சம் தடவித் தேய்த்து நீரில் அலசினால் அழுக்கு எளிதில் போய்விடும்.

தார் கறையைப் போக்க டர்பென்டைனும் பெயின்ட் கறையைப் போக்கப் பெட்ரோலும் உதவும்.

நீரில் புகையிலையை ஊறவைத்து அச்சாற்றை எறும்புப் புற்றில் ஊற்றினால் அவை வேறிடம் நாடிப் போய்விடும்.

உபயோகித்துக் கடைசியாக மிஞ்சும் சிறு துண்டு சோப்பு மற்றும் டெடர்ஜெண்டை நீரில் கரைத்து ஒரு புட்டியில் வைத்திருந்தால் தரைகளைத் துடைத்துச் சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்.

சில்க் துணிகளை சலவை செய்யும் போது ஒரு வாளி நீரில் அரைமூடி எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும். இதில் அலசினால் துணி பளபளவென்றிருக்கும்.

பிரிஜ்ஜில் ஐஸ் ட்ரேக்கு அடியில் ஒரு பிளாஸ்டிக் விரிப்பைப் போட்டு வைத்தால் டிரேயை எடுப்பது எளிதாக இருக்கும்.

அவசரத்துக்கு வெள்ளியினாலான பொருளை பளபளப்பாக வேண்டுமானால் கொஞ்சம் டூத் பேஸ்டினால் தேய்த்து துணியால் துடைத்தால் போதும். கறுப்பு மறைந்து பளிச்சென்றாகும்.

பார்சல்கள்  கட்டும் கயிற்றை நீரில் நனைத்துக் கொண்டு கட்டினால் கயிற்றில் ஈரம் காய்ந்த பிறகு கட்டு நன்றாக இறுகும்.

வாங்கும்போது பளபளவென்றிருக்கும் குடைத் துணி நாளடைவில் நிறமிழந்து மங்கி போய்விடும். நவசாரத்தை நீரில் கரைத்துக் கொண்டு அதனால் குடைத் துணியை அழுத்தித்  துடைத்தால்  புது மெருகு வந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here