எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய வீட்டுக் குறிப்புகள்

முக்கிய வீட்டுக் குறிப்புகள்

வீட்டுக் குறிப்புகள்

அவசரத்திற்கு வாங்கும் தண்ணீர் பாட்டலை பல விதத்தில் உபயோகப்படுத்தலாம். தேவையான உயரத்திற்கு கட்பண்ணி, சின்ன காப்பாகயிருந்தால் ரப்பர் பேண்டு, ஹேர்பின் எனவும். சிறிது பெரிதாக இருந்தால் பென்சில், பேனா, பேஸ்ட், பிரஸ் எனவும், அகல பாட்டில் என்றால் அவரவர் ஷூ ஷாக்க்ஸ் என்று தனித்தனியாகப் போட்டு வைக்கலாம். மேல் பகுதியை புனலாக உபயோகிக்கலாம்.

நீண்ட நாட்கள் வெளியூர் செல்லவேண்டி இருந்தால் அகலமான தட்டில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் பூந்தொட்டியை வைத்துச் சென்றால் பூக்கள் வாடாமல் புதிது போலவே இருக்கும்.

வீட்டு வேலை, சமையல் வேலை செய்து கைகள் காய்ந்துபோய் இருக்கும் பெண்களுக்கு ரோஜா இதழை அரைத்து கையில் பூசினால் கை பளபளப்பாகவும், மெத்தென்றும் இருக்கும்.

பாத்திரம் துலக்கும் போது பவுடருடன் சிறிது உப்பு சேர்த்து துலக்கினால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும். கொளகொளப்புத் தன்மையும் இருக்காது.

எலுமிச்சம் பழத்தை பிழிந்தவுடன் அந்த தோலை செம்பு பாத்திரம், பித்தளை பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினால் பளிச்சென்றுஇருக்கும்.

குக்கர் வைக்கும்போது உள்ளே எலுமிச்சை தோலை போட்டு வைத்தால் உட்புறம் பளிச்சென்று இருக்கும்.

காயவைத்த எலுமிச்சை தோல் மூடி, வேப்பிலை, சிறு வசம்பு மூன்றையும் பொடி செய்து சிறு துணியில் மூட்டை போல் கட்டி துணிகளுக்கு புத்தகங்களுக்கும் நடுவில் போட்டால் வாசனையாக இருக்கும். பூச்சிகள் வராது.

அதிக சூடான நீரில் துணிகளை அலசக்கூடாது. சற்று வெதுவெதுப்பான சூடுள்ள நீரில் அலசினால் துணிகளில் பற்றியுள்ள அழுக்கு இளகி வெளியேற அது உதவும். ஆனால் அதிகச் சூடான நீர் அழுக்கை வெளியேற்றுவதற்குப் பதில், அழுக்கை துணிகளில் அழுத்தமாகப் பற்றிக் கொள்ளச் செய்து விடும்.

பழைய துணிகளைப் போட்டுப் பாத்திரம் வாங்கும் வழக்கம் பெண்களிடம் பரவலாக உள்ளது. இதில் தங்கள் முழுவதுமாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறியாமல் ஏதோ பெரிய சாதனையை சாமர்த்தியமாக செய்து விட்டதாக மகிழ்கிறார்கள் பெண்கள். அப் பாத்திரங்கள் மட்டமான உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும்.

பிஸ்கட்  போன்றவற்றை என்னதான் பத்திரமாக மூடி வைத்தாலும் ஒரு சில நாட்களில் நமுத்து போய்விடும். பிஸ்கட் வைக்கும் டின்களில் கொஞ்சம் சக்கரையை தூவி வைத்தால் இதைத் தடுக்கலாம். டின்னின் உட்புறம் பக்கவாட்டில் பிளாஸ்டிக் பேப்பரை ஒட்டி வைப்பது மற்றொரு பாதுகாப்பு முறை.

தெர்மாஸ் பிளாஸ்கை எவ்வளவு முறை கழுவினாலும் அதில் ஒரு வித வாடை அவ்வப்போது ஏற்படுவது சகஜம். முட்டையின் வெள்ளைக்  கருவை  நீரில் கரைத்து அதைக் கொண்டு பிளாஸ்கை இரண்டு மூன்று தடவை கழுவினால் கெட்ட  வாடை அகன்று விடும்.

ப்ரிட்ஜ்  வைத்திருப்பவர்கள் அது எப்போதும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் வெளிப்புறம் தூசியும் அழுக்கும் படிவது சகஜம். சோடா பைகார்பனேட்டை  சிறிது நீரில் கரைத்து வெளிப்புறம் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு ஈரத்துணியால் துடைத்து விட்டால் ப்ரிட்ஜ் அழுக்கு நீங்கிப் புதுப்பொலிவுடன் திகழும்.

கோந்துப்  புட்டியை அதிக நாள் உபயோகப்படுத்தாமல் இருந்தால் கட்டி தட்டிப் போய்விடக்கூடும். அப்படி நேர்ந்தால் புட்டிக்குள் சிறிது வினீகரை ஊற்றவும். கோந்து இளகி விடும்.

சாப்பாட்டு மேசையில் வைக்கும் உப்புக் குப்பிகளின் துவாரம் வழியாக உப்பு சீராக வெளிப்பட குப்பிக்குள் உப்பு பொடியுடன் கொஞ்சம் அரிசியைப் போட்டு வைக்கவும்.

துணிகளுக்கு நீலம் போடும்போது கரைத்த நீரில் தேக்கரண்டி உப்பையும் சேர்த்துக் கொண்டால் நீலம் துணிகளில் திட்டுத்திட்டாக இராமல் ஒத்தாற்போல் பரவி இருக்கும்.

எந்த கறையும் உடனே கழுவினால் போய்விடும்.

துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித் துண்டில் குத்தி வைத்தால் அது துருப்பிடிக்காமல் இருக்கும்.

அதிகம் வெளிச்சம் உள்ள இடத்திலும், வெளிச்சம் மிகவும் குறைந்த இடத்திலும் டி.வி பார்க்கக்கூடாது. அறையிலுள்ள விளக்கு பார்ப்பவர்களது பின்புறம் இருக்க வேண்டும். அதுவும் 40 அல்லது 60 வாட் பல்புகளுக்கு  மேற்பட்டதாக  இருக்கக் கூடாது. 

சாப்பாட்டு மேஜையில் கொஞ்சம் புதினா அல்லது கறிவேப்பிலை வைத்திருந்தால் ஈக்கள் மொய்க்காது.

பட்டுப் புடவைகளைத் துவைப்பதற்கு சோப் பயன்படுத்த கூடாது. உடுத்திய பட்டுப் புடவையை அப்படியே மடித்து பெட்டியில் வைக்கக்கூடாது. வெயிலில் காயப் போடக்கூடாது. காற்றாடக் கொடியில் போட்டு உலர்த்திய பிறகே மடித்து வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here